Thursday, June 29, 2023

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்

🛞புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…!

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்.

அந்த சிற்பி, ஆறாவது முறையாக நடராஜப் பெருமாள் திருவுருவத்திற்கு அச்சு செய்து பஞ்ச உலோகங்களை தனியே காய்ச்சி வார்த்துக் கொண்டிருந்தான்.

பெரிய திருவாச்சியை தனியே வார்த்தாகி விட்டது.
சிவனுக்குரிய சடையை, அந்த சடையில் இருக்கும் நாகத்தை கங்கை உருவத்தை வார்த்தாகிவிட்டது.

சிவகாமிக்கும், நடராஜருக்கும் தனித்தனியே பீடம் செய்து முடித்தாகி விட்டது. இப்போது நடராஜரையும், சிவகாமியையும் வார்க்க வேண்டும்.

மழு தொலைவே கொதித்துக் கொண்டிருக்கிறது. அவன் அடுப்பைத் துருத்தியால் வேகமாக ஊதி உலையின் தீவிரத்தை அதிகப்படுத்தி மழுவைக் கொதிக்க வைத்துக் கொண்டிருந்தான். மழு தயார் நிலையில் இருந்தது.

திரும்பி மனைவியைப் பார்த்து துவங்கி விடட்டுமா? என்று கேட்டான். மனைவி சரியென்று தலையசைத்தாள்.

படுக்க வைக்கப்பட்ட பெரிய களிமண் அச்சுக்கு முன் கைகூப்பி நின்றான்.

 இது ஆறாவது முறை. என்ன தவறு செய்தேன் என்று தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பின்னம் நடந்து கொண்டிருக்கிறது.

உன்னை நான் உருவமாகச் செய்கிறேன் என்ற கர்வம் எனக்கில்லை.

ஈசனே, நீயே வந்து குடி கொண்டாலொழிய உன் உருவத்தை ஒரு நாளும் செய்ய முடியாது.எங்கேனும் ஒரு கர்வத்தில் நான் இருப்பின் தயவுசெய்து என்னை தண்டித்துவிடு. இந்த உருவத்திற்குள் வராமல் போகாதே என்று வேண்டினார்.

அந்தப்பகுதி, அரசனுடைய குரல் அவன் காதில் விழுந்தது.
“வேண்டுமென்றே தவறு செய்கிறாய் சிற்பியே, என்னிடம் காசு வாங்குவதற்காகவே நீயாக ஏதேனும் தவறு செய்துவிட்டு, பின்னமாகிவிட்டது குறையாகிவிட்டது, என்று வருத்தப்படுகிறாய்.

கடந்த நான்கு வருடங்களாக நடராஜர் சிலையை செய்வதாக கூறி என்னுடைய சம்பளத்திலே தின்றுகொழுத்து செய்துவருகிறாய், இதுவே கடைசி முறை இன்னும் இரண்டு நாட்களில் நடராஜர் சிலையை செய்யவில்லையெனில் நீ இங்கிருந்து புண்ணியமில்லை!

உன்னை சிற்பி என்று நாங்கள் அழைத்து லாபமில்லை. எனவே உன் கதையை என் வாளால் முடிப்பேன் “என்று சீறினான் அரசன்.

அந்த அரசன் நான்கு வருடங்கள் பொறுமையாக இருந்ததே பெரிய விஷயம். அவன் பொறுமை மீறும்படியாக என்ன ஏற்பட்டது தெரியவில்லை, அரசனிடம் இருந்து நடராஜர் சிலை செய்ய உத்தரவு சிற்பிக்கு வந்ததுமே அற்புதமான ஒரு நடராஜர் ஆயிரமாயிரம் காலத்திற்கு நிற்க வேண்டிய நடராஜர் செய்ய வேண்டும் என்ற வேகம் வந்தது. அந்த வேகத்தோடு கர்வம் வந்ததோ, என்னவோ தெரியவில்லை. ஐந்து சிலைகள் செய்தும் சரியாக வரவில்லை.

இது ஆறாவது சிலை.
ஒரு சிறு தவறும் நேராதவாறு எல்லா விஷயங்களையும் ஒரு முறைக்கு இரு முறை சோதித்து மெழுகால் சிலை செய்து பிறகு அதன் மீது களிமண் பூசி, சரியான இடத்தில் ஓட்டைகள் வைத்து காற்றுப் போக வழிகள் செய்து அவன் மழுவைக் காய்ச்சி இறைவனை வழிபடத் தொடங்கினான்.

மழு உச்ச நிலையில் கொதித்துக் கொண்டிருக்க, “என்னுடைய வாழ்க்கை உயர்வதும், தாழ்வதும் இப்பொழுது உன்கையில் இருக்கிறது. உனக்கு விருப்பம் இருப்பின் இதற்குள் வந்து உட்கார்ந்து கொள் இல்லையெனில் என்னை சாக விடு…! “என்று சொல்லிவிட்டு முழுமனதோடு மழுவை கிளரத் தொடங்கினான்.
உலையின் அனல் உடம்பு முழுவதும் அடித்தது.

 இருட்டில் யாரோ தொலைவிலிருந்து வருவது தெரிந்தது. வந்தவர்கள் ஆணும், பெண்ணுமான வயதான அந்தணர்கள்.
“அப்பா திருநல்லம் என்கிற ஊர் எது, ஏனப்பா மிகப்பெரிய ஊர் என்று சொல்கிறார்கள், ஏன் இப்படி வயல்களுக்கு நடுவே இருக்கிறது. இதை தேடிக் கண்டுபிடித்து வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

ஐயா, சிற்பியே, தயவுசெய்து குடிப்பதற்கு ஒரு குவளை நீர் கொடு” என்று கேட்டார் அந்தணர்.
சிற்பி திரும்பி ஆச்சரியத்தோடு அந்தணர்களைப் பார்த்தான், என்ன இந்த அந்தணர் தன்னிடம் போய் நீர் கேட்கிறாரே, என்று ஆச்சரியப்பட்டான்.
“அய்யா, நான் சிற்பி, கருமார் இனத்தை சேர்ந்தவன்.
அந்தணர்கள் வசிக்கும் பகுதி கோயிலுக்கு பின்புறம் இருக்கிறது. நீங்கள் பார்ப்பதற்கு அந்தணர்கள் போல் இருக்கிறீர்கள். எனவே, கோயிலுக்கு பின்புறம் போய் அந்தணர் வீட்டில் குடிக்க நீர் கேளுங்கள், தருவார்கள் “என்று சொன்னான்.

மறுபடியும் வேலையில் மூழ்கினான். வந்தவர் கைதட்டி அழைத்து “எனக்கு தாகமாக இருக்கிறது ஐயா, அக்ரஹாரம் போகிறவரையில் என்னால் தாங்க இயலாது சுருண்டு விடுவேன் என்று தோன்றுகிறது. எனவே உன் கையால் ஒரு குவளை நீர் கொடு “என்றான்.

“நான் இங்கு வேலை செய்து கொண்டிருப்பது உன் கண்ணில் படவில்லையா, ஒரு சிலை வடிப்பது எவ்வளவு கடினம் என்பது உங்களுக்கு தெரியாது…?

கவலையோடு நான் இங்கு நின்று கொண்டிருக்கிறேன். குடிக்க தண்ணீர் கொடு என்று என் உயிரை ஏன் வாங்குகிறீர்கள். என்னிடம் தண்ணீர் இல்லை, இந்த மழு தான் இருக்கிறது வேண்டுமானல் இதை குடியுங்கள்” என்று பதட்டத்தோடு சொல்ல.

“சரி அதையே குடித்துக் கொள்கிறேன்” என்று அருகே வந்த கிழவர், உஞ்சவர்த்தி பிராமணர் போல ஒரு சொம்பை இடுப்பில் கட்டி தொங்கவிட்டிருந்தார். அந்தச் சொம்பை விட்டு மழுவை மொண்டார், கொதிக்கின்ற நெருப்பு ஒளியோடு வீசுகின்ற மழுவை எடுத்து உயர்த்திக் குடித்தார். மழு வாய்க்குள் போயிற்று, மழுவை அவர் குடித்துக் கொண்டிருக்கும் போது சற்றுத் தொலைவில் நின்றிருந்த அவரது மனைவி வாய்விட்டுச் சிரித்தாள்..

சுற்றியுள்ள உதவியாட்களும், சிற்பியும் பயந்து போய் ஓவென்று கூவ, வந்தவரையும் காணோம், வந்தவர் மனைவியும் காணோம்.

ஐயா, கொதி நிலைக்கு வந்துவிட்டது என்று உதவியாளர் கூவ, எல்லாரும் கொதிக்கும் பாத்திரத்தின் அடிப்பக்க குழாயைத் திறந்து விட்டார்கள். மழு தரைவழிந்து பள்ளத்தின் வழியே சிற்பத்திற்குள் நதிபோல் ஓடி புகுந்து கொண்டது. சரியாய் எண்பது நொடிகளில் எல்லா உருக்கு உலோகமும் சிலைக்குள் போய் தங்கிவிட்டது.

அடுத்தது சிவகாமி சிலைக்கும் அவ்விதமே திறந்து ஊற்ற, அதுவும் சிலைக்குள் போய் அமர்ந்து மெழுகை வெளியே அனுப்பியது, மெழுகு உருகி வெளியேறும் புகையில் அடுத்தவர் முகம் தெரியவில்லை.
கிழவரையும், கிழவியையும் யாரும் தேடவில்லை.

உருக்கு மொத்தமும் வழிந்ததும் அவரவர் ஓரம் போய் திண்ணைகளில் சாய்ந்தார்கள். தலைக்கு துணிவைத்துக் கொண்டு மயக்கத்தில் ஆழ்ந்தவர்கள் போல் தூங்கினார்கள், விடிந்து என்ன நடந்தது என்று விவாதித்தார்கள்…! யோசித்தார்கள்…!

வந்தது சிவபெருமானே என்று முடிவு செய்தார்கள்.
ஓடிப்போய் களிமண்ணில் நீர் ஊற்றி மெல்ல மெல்ல பிரித்து சிலையைப் பார்த்தார்கள். சிலை ஆறடி உயரத்திற்கு மேலாய் அற்புதமாய் வந்திருந்தது.

குமிழ் சிரிப்பும், கோவைச் செவ்வாயும், அகலமான கண்களும், தீர்க்கமான நாசியும் அற்புதமான கோணத்தில் நடனமாடும் சிவனுருவம் மிகச் சிறப்பாக வந்திருந்தது.

நிமிர்த்தி பீடத்தில் நிற்க வைத்தார்கள், சடையையும், திருவாச்சியையும் மாட்டினார்கள். சிவகாமியையும் நிமிர்த்தி பீடத்தோடு பொருத்தினார்கள்.

ஊர்கூடிப் பார்த்து வியந்தது, கன்னத்தில் போட்டு கொண்டது. மன்னனுக்கு ஓடிப்போய் மந்திரிகள் செய்தி சொல்ல, மன்னனும் விரைந்து வந்து பார்த்தான்.

”உங்களுக்கெல்லாம் கத்தி எடுத்தால் தானடா காரியம் செய்ய முடிகிறது. தலையை கொய்து விடுவேன் என்று நான் ஆணையிட்டதனால் தானே இரண்டு நாளில் இத்தனை அற்புதமான ஒரு சிற்பத்தை செய்து முடித்தாய், இதுவரை நீ ஏமாற்றிக் கொண்டிருந்தது உண்மை என்று இப்போது தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது பார்” என்று சிரிப்போடும் கடுப்போடும் மன்னன் பேசினான்.

சிற்பி இல்லை என்று தலையாட்டினார், “என்ன சொல்ல வருகிறாய்?” மன்னன் மறுபடியும் சீறினான்.

”இது சிவனால் செய்யப்பட்ட சிலை, இப்படி அந்தணர் உருவத்தில் சிவன் வந்து நின்றார். மனைவியுடன் வந்து என்னிடம் பேசினார், தண்ணீர் கேட்டார் மறுத்தேன், இது தான் இருக்கிறது என்று மழுவை காண்பித்தேன், மழுவை ஏந்திக் குடித்தார் மறைந்தார்,” என்று சொல்ல….
“இந்த கதையெல்லாம் என்னிடம் விடாதே” என்று மறுபடியும் சீறினான்.

”இல்லை அரசே .இது சிவன் இருக்கிற சிலை, சிவன் மழுவுக்குள் கரைந்த சிலை. எனவே இதனுள் இறைவன் இருக்கிறான். இது என்னால் செய்யப்பட்ட சிலை அல்ல,” என்று பணிவாக சொல்ல, அரசன் கெக்கலித்து கிண்டலாகச் சிரித்தான்.

உளியை சிற்பியிடமிருந்து பிடுங்கி, இது சிவன் உருவம் சிவன் இருக்கிற உருவம் என்றால் இதை குத்தினால் ரத்தம் வருமோ என்று காலில் ஒரு காயத்தை ஏற்படுத்தினான்.

பளிச்சென்று குருதி கொப்பளித்து கொட்டியது! தரையை நனைத்தது.

மக்கள் பயந்தார்கள், அரசன் திகைத்துப் போனான். பயத்தில் சுருண்டு விழுந்தான்.
இறைவனை சோதித்த அரசனின் உடம்பு முழுவதும் தொழுநோய் பரவியது. அவன் சிற்பியிடமும், இறைவனிடமும் கைகூப்பி மன்றாடி மன்னிப்பு கேட்டான் என்பது கோனேரி ராஜபுரத்தின் கதை.

எங்கே இருக்கிறது இந்த கோனேரிராஜபுரம், கும்பகோணம் காரைக்கால் பேரூந்து பாதையில் புதூர் என்ற ஊரை அடைந்து, அங்கேயிருந்து வலதுபுறமாக போகும் சாலையில் விசாரித்துக் கொண்டு போக வேண்டும்.

வயல் வெளிகளுக்கு நடுவே ஒரு பெரிய கிராமம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது.
கோனேரி ராஜபுரத்திற்கு முற்காலப் பெயர்  திருநல்லம். இந்த கோனேரி ராஜபுரத்திற்கு சோழமன்னன் கண்டராதித்தனும் அவன் மனைவி செம்பியன் மாதேவியும் பல நிவந்தங்கள் விட்டிருக்கிறார்கள்.

ஊர் மிகச் செழிப்பான ஊர். நடராஜர் விக்ரகத்தை பார்க்க வேண்டுமானால் அதை கோனேரி ராஜபுரத்தில் தான் பார்க்க வேண்டும்.

உலகத்திலேயே மிகப் பெரிய நடராஜர் சிலை இந்த ஊரில் தான் இருக்கிறது. அழகு என்றால் அழகு அப்படியொரு கொள்ளையழகு. சிற்ப கலை தெரிந்தவர்கள் மட்டுமல்ல, சிற்பக் கலைப்பற்றி தெரியாதவர்கள் கூட அருகே போய் நின்றார்கள் என்றால் அப்படியே பரவசமாகிவிடுவார்கள்.

சிற்பக் கலை தெரிந்தவர்கள் மயக்கமாகி விடுவார்கள்!

 கைரேகை, அக்குள் பக்க கருப்பு, அங்கு வழக்கமாய் எல்லா ஆண்களுக்கும் இருக்கின்ற கொழுப்புக் கட்டி, புறங்கை தேமல் என்று பல்வேறு விஷயங்கள் அற்புதமாக அந்த சிற்பி செய்திருக்கிறான்.

அரசன் உளியால் செதுக்கிய இடமும் பாதத்திற்கு மேல் அப்படியே இருக்கிறது. கோயில் ஆயிரம் வருடத்து கோயில். கோனேரி ராஜபுரம் சுவாமியின் பெயர் உமாமகேஸ்வரர் அல்லது பூமீஸ்வரர்!

 தோட்டமும் துறவுமாய் பூமி பாக்கியம் வேண்டும் என்று விரும்புபவர்கள் இவரை வணங்கினால் நிச்சயம் பெறலாம் என்று சொல்லப்படுகிறது. நான் செழிப்பாக இருக்க நல்ல பூமியை கொடு என்று இந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டு உழைத்தால் நிச்சயம் அவன் கையகல பூமிக்காவது சொந்தக்காரனாவான் என்று நம்பப்படுகிறது.

தவிர அங்கு வைத்தியநாதன் சன்னதி இருக்கிறது, அந்த வைத்திய நாத சன்னதியில் ஜபம் செய்தால், வேறு யாருக்கேனும் உடம்பு சரியில்லை என்று நாம் இறைவன் பெயரை திரும்பத் திரும்பத் சொன்னால் சம்மந்தப்பட்டபவருக்கு நோய் குணமாவதாகவும் அன்பர்கள் சொல்கிறார்கள்.

இறைவி பெயர் தேகசௌந்தரி,
ஸ்தலமரம் அரசு,
தீர்த்தம் பிரம்ம தீர்த்தம்.

கும்பகோணம் போகிறவர்கள் அரை நாள் கோனேரிராஜபுரத்திற்கு ஒதுக்கி வைத்துவிடவேண்டும். நிதானமாக பார்த்துவிட்டு வரவேண்டும்.

குறிப்பாக அந்த வைத்தியநாத சன்னதி மண்டபத்தில் உட்கார்ந்து ஜபம் செய்துவிட்டு அல்லது கண்மூடி இறைவன் பெயரைச் சொல்லிவிட்டு வருதல் மிக அவசியம்.
 எல்லாவற்றையும் விட உங்கள் வாழ்நாளில் ஒரு முறையேனும் இந்த நடராஜனை பார்த்து கைகூப்பிவிட்டு வாருங்கள்!

கை நிறைய வில்வம் குடந்தையிலேயே வாங்கி கொண்டு போய் அவன் கால் அடியில் சொரிந்துவிட்டு வாருங்களேன்!

திருநல்லம் ஒரு முறையேனும் சென்று வாருங்கள். சிவ அழகில் சொக்கிப் போய் வருவது கண்கூடான உண்மை.

Monday, June 14, 2021

*பாகப் பிரிவினையின் போது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்*

*சரிசமமாக பிரித்து* *கொள்கிறோம் என்பது பல பங்குகளாக பிரித்து கொண்டு, ஒருவருக்கு மட்டும் அதில் மதிப்பு* *குறைவானதாக சொத்து கிடைத்தால், அந்த பாகப் பிரிவினையை எதிர்த்து கோர்ட்க்கு சென்று அந்த பாகப்பிரிவினை* *செல்லாது என்றும் நியாயமாக பிரிக்கவில்லை என்று டிகிரி வாங்கலாம்.
எல்லோருக்கும் சமமாக பங்கு பிரிக்க வேண்டும் என்று அவசியம் இல்லை, ஒருவருக்கு கூட, ஒருவருக்கு குறைய இருக்கலாம். ஆனால் அதற்கு சரியான விளக்கம் பாகப்பிரிவினை பத்திரத்தில் இருக்க வேண்டும்.
பிரிக்க முடிந்த சொத்தை சுலபமாக பாகம் பிரித்துக் கொள்ளலாம்.

பிரிக்க முடியாததை பிரித்தால், மிக சிறிய பங்காகி விடும் என்று கருதினால்* அதனை, (NOT DIVISIBLE BY METERS AND BOUNDS) அதாவது, நீள அகலத்துடன் பிரிக்க முடியாத சொத்து என்று சொல்லபடுகிறது.
பிரிக்க முடியாத சொத்தை யாராவது ஒருவர் யாருக்காவது விட்டு கொடுத்துவிட்டு அதற்கேற்ற பணத்தை பெற்று கொண்டு விடுதலை பத்திரம் எழுதி கொடுத்து சொத்தில் இருந்து வெளியேறலாம். 

(இப்பொழுது பாகப்பிரிவினை செய்து, தனித்தனி, பத்திரம் தேவையில்லை.).... என்று உதாரணத்திற்கு வைத்து கொள்வோம்...

பிரிக்க முடியாத சொத்தை, யாரும் யாருக்கும் விட்டு கொடுக்க மனம் இல்லை, பகை முரண்களில் சகோதர, சகோதரிகள் சிக்கிக் கொண்டு அனைவரும் சொத்து எனக்கு வேண்டும் என்று சொன்னால், அந்த சொத்தை பொது ஏலத்திற்கு தான் கொண்டு வர வேண்டும். அதில் வரும் தொகையை அனைவரும் பிரித்து கொள்ள வேண்டும்.

பாகம் பிரிக்கும் சொத்துக்களில் இருக்கும் கடன்களை, ஒருவர் மட்டும் மீட்டு இருந்தால், அதற்கான பணத்தை பெற அவருக்கு உரிமை உண்டு.
மேற்படி சொத்துக்களில் மற்ற பாகஸ்தர்களின் சம்மதத்தோடு அதில் ஒரு மாடியோ, சுற்று சுவரோ கட்டி இருந்தால் அதற்கான பணத்தை பெறலாம்.

மற்ற பாகஸ்தரர்கள் முதலில் ஒப்புக்கொண்டு விட்டு, பிறகு ஒப்புக் கொள்ளவில்லை என்றாலும், அதற்கு பங்கு கேட்பதும் முடியாத காரியம்.
பாகப்பிரிவினையில் எப்போது மூத்தவர்கள் தான் விட்டு கொடுக்க வேண்டும். இளையவர்களும் விட்டுக் கொடுக்கலாம். ஆனால் நம் முன்னோர் மரபு “வலுத்தவர்கள் விட்டு கொடுக்க வேண்டும் என்பதே”! 

அதனால் வயதில் பெரியவர்களையே விட்டு கொடுக்க சொல்லி இருக்கின்றனர்.
சொத்தை பங்கிடும் போது கிழமேலாகவோ அல்லது தென் வடக்காகவோ பங்கிடலாம். அவ்வாறு பங்கிடும் போது கிழமேலிருந்தால் கிழக்கு ஓரத்தின் முதல் பங்கு கடைசி குட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு அடுத்தவர் அதற்கு அடுத்த பங்கு, இப்படியாக மேற்கு கடைசி பங்கு மூத்தவர் எடுத்து கொள்ளலாம். இதேபோல் வடக்கிலிருந்து பிரிக்கும் போது வடக்கின் முதல் பாகம் கடைசி தம்பிக்கும், தெற்கின் இறுதி பங்கு மூத்தவர்க்கும் கிடைக்கும்.
இளையவன் அதிக சலுகை பெற்றால் எதிர்காலத்தில் மூத்தவர்கள் வயதாகும் போது இளையவன் தோள் கொடுப்பான் என்று இந்த மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.

பாகப்பிரிவினையில் பணத்தை வீணாக்காமல் இருக்க 11 வழி முறைகள்.....

சகோதர, சகோதரிகளிடையே இணக்கமும், அன்பும் இல்லாத இடத்தில் பாகபிரிவினையில், அதிக அளவு செலவுகள் ஆகும். மூத்தவர் இறுக்கி பிடித்தால் இளையவரும் இறுக்கிப் பிடிப்பார் என்ற உண்மையை உணர்தல் வேண்டும்.

பங்குகளில் சச்சரவு இல்லாமல் பிரிக்க வேண்டும். எப்போதும் குடும்பத்தினருக்குள்ளேயே பேசி முடிக்க வேண்டும். யாருக்கு என்ன பங்கு என்று, வெளிநபரையோ, நாட்டாமையையோ, பெரிய மனுஷங்களையோ அறவே தவிர்க்க வேண்டும்.

பங்கு பிரிப்பதில் முரண்பாடுகள் அதிகம் இருந்தாலும் நிச்சயம் நீதிமன்றம் நாடக்கூடாது. பேசித் தீர்க்க வேண்டும். மிக மிக கடைசி வாய்ப்பாக கோர்ட்டை தீர்வாக நினைக்க வேண்டும்.
நீதிமன்றத்திற்கு செல்லும் நிலையில், பெரிய மனுஷன்களை வைத்து பேச்சுவார்த்தையை நடத்தலாம்.

சகோதரர் சகோதரிகளிடையே பேச்சுவார்த்தை இல்லாத நிலையில் பாகம் கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பக் கூடாது. முடிந்தவரை நேரில் சந்தித்து பேச வேண்டும். முடியவில்லை என்றால் நீங்களே கைப்பட பாகம் கேட்டு சகோதரர் சகோதரிகளுக்கு கடிதம் எழுதலாம்.

பாகப் பிரிவினை வேலையை செய்ய செலவு யார் செய்வது என தள்ளி போட்டால், நாள் தள்ள தள்ள செலவு கூடுமே தவிர நிச்சயம் செலவு குறையாது.

“பூனைக்கு யாராவாது மணிகட்ட வேண்டும்” என்ற எண்ணத்தில் யாராவது ஒரு சகோதரர் அல்லது சகோதரி முன் முயற்சி எடுக்க வேண்டும். அனைத்து சகோதரி சகோதர்களும் ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு வேலையில் இருந்தாலும், இவர்களை ஒருங்கிணைக்க ஒருவர் முன் முயற்சி எடுக்க வேண்டும்.

பெரும்பாலும், குடும்ப நல்லது கெட்டதுகளில் கூடும்போது இந்த பாக பிரிவினைகளை முடித்துவிட வேண்டும். பாகப் பிரிவினைக்கு என்று ஒரு தனி சந்திப்பு என்பது வீணான செலவுகள்.
நிலவரி திட்ட சர்வே நடக்கும் போதோ , ஜமாபந்தியின் போதோ எளிதாக வருவாய் துறையின் ஆவணங்களில், அனைத்து பாகஸ்தாரர்களின் பெயரை சேர்த்து விடலாம். செலவு மிக குறைவு.

பெரும்பாலும் விவசாய நிலங்களை கூர்சீட்டு போட்டு கொள்ளலாம். தனிப்பட்டாவை அதன் மூலம் மாற்றி கொள்ளலாம்.
நகர சொத்துகளுக்கு மற்றும் அதிக மதிப்பு உள்ள சொத்துக்களுக்கு மட்டும், பாகவிரினை பத்திரம் போட்டு கொள்ளலாம்.

பாகப் பிரிவினையில் யார் யாருக்கு எவ்வளவு பங்கு?

நீங்கள் வாங்கும் சொத்து பாக பிரிவினை மூலம் வந்து இருக்கிறது என்றால், பாகப்பிரிவினை பத்திரத்தையோ (அ) கூர் சீட்டையோ நன்கு படித்து பார்த்து சட்டப்படி யார் யாருக்கு எவ்வளவு பாகம் என்று தெரிந்து கொண்டு, அந்த பங்கின் படி தான் நீங்கள் வாங்கும் சொத்து இருக்கிறதா என்று சரி பார்க்க வேண்டும்.

இதில் கொஞ்சம் கவனம் குறைந்து விட்டாலும் எதிர்காலத்தில் மற்றொரு பாகஸ்தர்களோ, அவர்களின் வாரிசுகளோ வழக்கு போடலாம். எனவே கீழ்க்கண்ட பட்டியலை எப்போதும் மனதில் வையுங்கள்.

இஸ்லாம் சட்டப்படி கணவன் இறந்தால் யார் யாருக்கு எவ்வளவு பங்கு?

கணவன் இறந்தால்
கணவன் சொத்தில் மனைவிக்கு 1/8

பிள்ளைகளுக்கு
மீதி இருக்கும் பங்கு

பிள்ளைகளில் ஆண்களுக்கு
மீதியில் 2 பங்கு வீதம்

பிள்ளைகளில் பெண்களுக்கு
மீதியில் 1 பங்கு வீதம்

ஆண் வாரிசு இல்லாமல் ஒரே ஒரு பெண் மட்டும் வாரிசாக இருந்தால்
மீதியில் 1/2 பங்கு

ஆண் வாரிசு இல்லாமல் பல பெண்கள் வாரிசாக இருந்தால்
மீதியில் 2/3 பங்கு

இறந்த கணவனுக்கு வாரிசுகள் இல்லை என்றால்
மனைவிக்கு 1/4 பங்கு

இறந்த கணவனுக்கு வாரிசுகள் இல்லை என்றால் தாயாருக்கு
மீதியில் 1/3 பங்கு

இறந்த கணவனுக்கு வாரிசுகள் இல்லை என்றால் தந்தை மற்றும் தாத்தா பாட்டிக்கு
1/6 பங்கு

இஸ்லாம் சட்டப்படி மனைவி இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு ?

மனைவி இறந்தால், மனைவி சொத்தில் கணவனுக்கு
1/4 பங்கு

பிள்ளைகளுக்கு
மீதி உள்ளதை எடுத்துக் கொள்ள வேண்டும்.

எப்படி எடுத்துகொள்ள வேண்டும் என்றால் மகன்களுக்கு
மீதி உள்ளதில் 2 பங்கு வீதம்

மகள்களுக்கு
மீதி உள்ளதில் 1 பங்கு வீதம்

ஆண் வாரிசு இல்லாமல் ஒரே ஒரு பெண் மட்டும் வாரிசாக இருந்தால்

மீதி உள்ளதில் 1/2 பங்கு

ஆண் வாரிசு இல்லாமல் பல பெண்கள் வாரிசாக இருந்தால்
தலா 2/3 பங்கு

மேற்படி மனைவி, வாரிசுகள் இல்லாமல் இறந்து விட்டால்
½ பாகம்,( சரி பாதி கணவனுக்கு)

மனைவியின் தாயாருக்கு
மீதி சொத்தில் 1/3 பங்கு வீதம்

மனைவியின் தகப்பனார்ருக்கு (தாத்தா & பாட்டிக்கு)
1/6 பங்கு

கிறிஸ்தவ சட்டப்படி கணவன் இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு?

கணவன் இறந்தால் மனைவிக்கு
கணவரின் சொத்தில் 1/3 பங்கு

மகன்கள் மற்றும் மகள்களுக்கு
மீதம் உள்ள இரண்டு பங்கு 2/3 பங்கு சரி சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

கணவருக்கு வாரிசு இல்லையென்றால் 1/3 பங்கை மனைவி எடுத்து கொண்டு கணவனின் தந்தைக்கு கொடுக்க வேண்டும்.

தந்தையும் இல்லை என்றால் அவரின் தாயாரும் சகோதர சகோதரிகளும் சரி சமமாக எடுத்து கொள்ளலாம்.

கிறிஸ்தவ சட்டப்படி மனைவி இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு?

மனைவி இறந்தால் அவரின் கணவருக்கு
மனைவியின் சொத்து கணவருக்கு சொத்தில் 1/3 பங்கு

மகன்கள் மற்றும் மகள்கள்
மீதம் உள்ள இரண்டு பங்கு 2/3 பங்கு சரி சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும்.

இறந்தவர் மனைவி வாரிசு இல்லை என்றால்....

கணவன் சொத்தில் 1/3 எடுத்து கொண்டு மீதி சொத்தை தந்தைக்கு கொடுத்து விட வேண்டும்.

மேற்படி தந்தை இல்லை என்றால் மேற்படி சொத்து தாயாருக்கோ அல்லது சகோதர சகோதரிக்கோ சரி சமமாக பிரித்து கொடுக்க வேண்டும்.

இந்து சட்டப்படி கணவன் இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு ?

கணவன் இறந்தால் அவருடைய முதல் வாரிசுகள் அனைவருக்கும் சம பங்கு.

கணவரின் முதல் வாரிசுகள் யாரும் இல்லையென்றால் இரண்டாம் வாரிசுகளில் தந்தை மட்டும் முழு சொத்தையும் அடையலாம்.

கணவரின் இரண்டாம் வாரிசுகளில் தந்தை இல்லையென்றால் மீதி உள்ள இரண்டாம் வாரிசுகள் அனைவரும் அனைவருக்கும் சம பங்கு அடையலாம்.

இரண்டாம் வாரிசுகளில் சிலர் உயிருடன் இருந்து சிலர் உயிருடன் இல்லையென்றால் உயிருடன் இல்லாதவர்களுக்கும் அவர்களுடைய வாரிசுகளுக்கும் எந்த வித பங்கும் கிடையாது.

இரண்டாம் வாரிசுகளில் தந்தை மற்றும் சகோதர சகோதரிகள் யாருமே உயிருடன் இல்லையென்றால் இரண்டாம் வாரிசுகளின் வாரிசுகளுக்கு சொத்து கிடைக்கும் .

இந்து சட்டப்படி கணவனின் முதல் வாரிசுகள் யார் யார் ?

1. தாய்
2. 2. மனைவி
3. 3. மகன்
4. 4. மகள்
5. 5. முன்னரே இறந்த மகனின் குழந்தை
6. 6. முன்னரே இறந்த மகளின் குழந்தை
7. 7. இறந்த மகனின் விதவை மனைவி
இந்து சட்டப்படி கணவனின் இரண்டாம் வாரிசுகள் யார் யார் ?

1. தந்தை
2. 2. தந்தை இல்லையென்றால் உயிருடன் இருக்கும் சகோதர சகோதரிகள்
3. 3. சகோதர சகோதரிகள் யாரும் உயிருடன் இல்லையென்றால் அவர்களின் வாரிசுகள்
இந்து சட்டப்படி மனைவி இறந்தால் யார்யாருக்கு எவ்வளவு பங்கு ?

மனைவி இறந்தால் அவருடைய வாரிசுகள் அனைவருக்கும் சம பங்கு.

மனைவியின் வாரிசுகள் யாரும் இல்லையென்றால் கணவனின் வாரிசுகளுக்கு சம பங்கு.

கணவனின் வாரிசுகள் இல்லையென்றால் மனைவியின் தகப்பனார் வாரிசுகள் சம பங்கு அடைவார்கள்.

மனைவியின் தகப்பனார் வாரிசுகள் இல்லையென்றால் மனைவியின் தாயார் வாரிசுகள் அடைவார்கள் சம பங்கு அடைவார்கள் .

மனைவிக்கு குழந்தை இல்லாமல் கணவன் மட்டும் இருந்து சொத்து மனைவியின் சுய சம்பாத்தியமாக இருந்தால் கணவனுக்கும் கணவனின் வாரிசுகளுக்கும் முழுமையாக சென்றடையும் .

மனைவிக்கு குழந்தை இல்லாமல் கணவன் மட்டும் இருந்து சொத்து சீதனமாக தந்தையார் வழியில் வந்திருந்தால், மேற்படி சொத்து கணவனுக்கும் கணவனின் வாரிசுக்கும் சேராது . திரும்ப தந்தையார் வாரிசுகளுக்கு சென்று விடும்.

இந்து சட்டப்படி மனைவிக்கு முதல் வாரிசுகள் யார் யார் ?

1. பெண்ணின் மகன்கள்
2. 2. பெண்ணின் மகள்கள்
3. 3. முன்னரே இறந்த மகனின் குழந்தைகள்
4. 4. முன்னரே இறந்த மகளின் குழந்தைகள்
5. 5. கணவர்
…………………………………………………………………………………………………..

தெரிந்து கொள்ள வேண்டிய 3 வகையான பாகப்பிரிவினை பத்திரங்கள்....

ஒரே குடும்பத்தினர் பாகபிரிவினை பத்திரம்:

“ஒரே குடும்ப உறுப்பினர்கள்” என்பது 

‘தாத்தா, பாட்டி, (தந்தைவழி தாய்வழி, இரண்டும் தான்), 

தந்தை, 
தாய், 
மகன், 
வளர்ப்பு மகன், 
மகள், 
வளர்ப்பு மகள், 
பேரன்,
 பேத்தி, 
 சகோதரன், 
 சகோதரி” 
ஆகிய இந்த உறவுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். 

(இதைத் தாண்டி, பெரியப்பா, சித்தப்பா, அவர்களின் மகன், மகள், அண்ணி, மைத்துனன் போன்றவர்கள் இரத்த உறவாக இருந்தாலும், அவர்கள் குடும்ப உறுப்பினர்கள் என்ற இந்த விளக்கத்துக்குள் வரமாட்டார்கள்) என்று பத்திரபதிவு அலுவலகம் சொல்கிறது .

பாகம் பிரித்துக் கொள்ளும் சொத்தானது...

1. பூர்வீகச் சொத்தாக இருந்தாலும்
2. ,
3. 2. நம் தகப்பனார், தாயார் மூலம் கிடைக்கும் சொத்தாக இருந்தாலும்,
3. பெற்றோர்கள் இறந்த பின், நமக்கு வாரிசு முறைப்படி கிடைக்கும் சொத்தாக இருந்தாலும்
மேற்படி பூர்வீக சொத்தைப் பிரித்துக் கொள்பவர்கள் அனைவரும் “ஒரே குடும்ப உறுப்பினர்களாக” இருக்க வேண்டும்.

ஒரே குடும்ப உறுப்பினர்களாக இருந்தால், அவரவர் பாகச் சொத்தின் மதிப்புக்கு 1% ஸ்டாம்ப் கட்டணமும், 1% பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்; அதிலும் சலுகையாக, ஸ்டாம்ப் கட்டணம் மிக அதிகபட்சமாக ரூ.25,000/-ம், பதிவுக் கட்டணம் மிக அதிக பட்சமாக ரூ.4,000/- செலுத்தினால் போதும் என்று, இந்திய முத்திரைச் சட்டத்தில் (தமிழ்நாடு திருத்தல் சட்டத்தில்) சொல்லப்பட்டுள்ளது.

அதாவது சொத்தின் மதிப்பு ரூ..25 லட்சம் வரை 1% ஸ்டாம்பு கட்டணம் என்றும், சொத்தின் மதிப்பை அந்த ரூ..25 லட்சத்தை தாண்டிவிட்டால், அது எவ்வளவு அதிகமான மதிப்பாக இருந்தாலும், அதிக பட்ச ஸ்டாம்ப் கட்டணமாக ரூ.25,000/- செலுத்தினால் போதும். மேலும் இந்த கட்டணத்தை பிரித்துக் கொள்ளும் ஒவ்வொரு பங்கின் மதிப்புக்கும் செலுத்தி இருக்க வேண்டும். இவ்வாறான ஸ்டாம்ப் கட்டணம் அல்லாமல், பதிவுக் கட்டணமாக அதிக பட்சமாக ரூ.4,000/- ஒவ்வொரு பங்குக்கும் செலுத்த வேண்டும்.

குடும்ப உறுப்பினர் அல்லாத பாகபிரிவினை பத்திரம்....

குடும்ப உறுப்பினர் அல்லாதவர்களுக்குள் நடக்கும் பாகப் பிரிவினை. இதில், உறவே இல்லாத இரண்டு நபர்கள் சொத்தை வாங்கி வைத்திருந்தால், அவர்கள் இந்த இரண்டாம் வகைப்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம்.

குடும்ப உறுப்பினர் அல்லாத வேறு உறவினர்கள் கூட்டாக ஒரு சொத்தை வாங்கி இருந்தாலும், அல்லது வாரிசு முறையில் அடைந்திருந்தாலும் அவர்களும் இதன்படி பாகம் பிரித்துக் கொள்ளலாம்.

இதில், சொத்தை இரண்டாகவோ, அல்லது பல பங்குகளாகவோ பிரித்துக் கொள்வர். இந்தமுறை பாகப்பிரிவினைப்படி, ஸ்டாம்ப் கட்டணம் சற்று வித்தியாசமாக இருக்கும்.

இதில் எது பெரிய பங்காக இருக்கிறதோ அதை விட்டு விட்டு, மற்ற சிறிய பங்குகளின் மொத்த மதிப்பை கணக்கெடுத்து அந்த தொகைக்கு 4% வீதம் (அதாவது பிரிந்த பங்கு சொத்துக்களின் மதிப்பு ரூ. ஒரு லட்சமாக இருந்தால் ஸ்டாம்ப் கட்டணம் ரூ.4,000/- என்றும், மதிப்பு இரண்டு லட்சமாக இருந்தால் ஸ்டாம்ப் கட்டணம் ரூ.8,000/- என்றும் செலுத்த வேண்டும்.)

பின்னர் பதிவுக் கட்டணமாக இதேபோல பிரிந்த பங்குகளின் (பெரிய பங்கு தவிர மற்ற பங்குகள் பிரிந்த பங்குகள் எனப்படும்) மதிப்புக்கு 1% வீதம் பதிவுக் கட்டணமும் செலுத்த வேண்டும்.

3.கூர்சீட்டு (வாய்மொழி பாகப்பிரிவினை பத்திரம்)

விவசாய நிலங்களை பாகம் செய்து கொள்ளும் போது, வாய்மொழியாகவே பேசி அவரவர் பங்கு நிலத்தை பாகமாகப் பிரித்துக் கொள்ளலாம். நம் குடும்ப பெரியவர்கள் முன்னிலையிலும் பேசிக் கொள்ளலாம்.

அதை பத்திரத்தில் எழுதிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

அவ்வாறு பங்கு பிரித்த படியே பட்டாவை மாற்றிக் கொண்டால் போதுமானது. பாகப்பிரிவினை என்பது “சொத்து மாறுதல்” என்ற கணக்கில் வராது.

எனவே இந்திய பதிவுச் சட்டப்படி அதை பத்திரமாக எழுதிப் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என இந்திய சுப்ரீம் கோர்ட் பல வழக்குகளில் குறிப்பிட்டுள்ளது.

இருந்த போதிலும், நாம் அவரவர் ஞாபகத்துக்காக அதை ஒரு சீட்டில் (பேப்பரில் எழுதி) அதில் சம்மந்தப்பட்டவர்கள் கையெழுத்தையும் பெற்று ஒவ்வொருவரும் ஒரு காப்பியை வைத்துக் கொள்ளலாம்.

இதையே “வாய்மொழி பாகப் பிரிவினை” என்றும் “கூர்சீட்டு” (அதாவது கூர் போட்டுக் கொண்ட கணக்குச் சீட்டு) என்றும் சொல்கிறோம்.

அதை பத்திரப் பதிவு அலுலகத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஏன் என்றால், அந்த கூர்சீட்டில் இன்றைய தேதியில் சொத்துக்களை பிரித்துக் கொண்டதாக எழுதிக் கொள்ளமாட்டோம்.

அதற்குப் பதிலாக, பங்குதாரர்கள் ஏற்கனவே வாய்மொழியாக சொத்தை முன்னரே பிரித்துக் கொண்டதாகவும், அதை இன்று ஒரு ஞாபகச் சீட்டாக எழுதிக் கொண்டோம் என்று தான் அதில் எழுதி இருக்க வேண்டும்.

ஆனால், இன்றே சொத்துக்களை பாகமாகப் பிரித்து எடுத்துக் கொண்டுள்ளோம் என்று எழுதி இருந்தால், அது சொத்தை மீது பரிமாற்றம் நடைபெற்றதாகக் கருதி, அதை பதிவு செய்ய வேண்டிய கட்டாயாமும் ஏற்பட்டுவிடும்.

Tuesday, June 8, 2021

கறி சோறும், ஞாயிற்று கிழமையும்

கறி :

சுமார் இருபது வருடங்களுக்கு முன்புவரை கூட மக்கள் கறிச்சோற்றுக்கு இப்படி ஆவலாய் ஆசைப்பட்டு பார்த்ததில்லை. இத்தனைக்கும் அப்போது எல்லா வீடுகளிலும் ஆடு , கோழிகள் வளர்ப்பார்கள்...இப்போது போல அப்போது இவற்றுக்கெல்லாம் பெரிய விலை மதிப்பும் கிடையாது...

கிராமங்களுக்குச்சென்றால் எல்லா வீடுகளிலும் ஆட்டுப்பட்டி இருக்கும்...கோழிகளை அடைத்து வைக்கும் பெரிய கூடை இருக்கும்...கூலி வேலை செய்பவர்கள் வீடு உட்பட...வேலைக்குச்சென்று வேலை செய்யும் இடங்களிலும் திரும்பும் வழியில் , வேலிகளில் படர்ந்துள்ள கொடிகளை சேகரித்துக்கொண்டே செல்வார்கள் ஆடுகளுக்கு தீவனம் போட...

அவர்கள் நினைத்திருந்தால் வாரம் ஒருமுறை என்ன , தினமும் கூட கறி சாப்பிட்டிருக்கலாம்...ஆனால் அப்படிச்செய்ததில்லை.. ஞாயிற்றுக்கிழமையானால் கறிச்சோறு தின்றே ஆகவேண்டும் என்று மக்கள் அலைந்ததில்லை...அசைவம் சாப்பிடுவதற்கான காரணங்கள் கூட மிக அரிதானவை...

வராத விருந்தாளிகள் [ குறிப்பாக மருமகன் ] வந்தால் கோழி அடித்து குழம்பு வைப்பார்கள்.. அல்லது வீட்டில் குழந்தைகளுக்கு சளி பிடித்து ரொம்பவும் தொந்தரவு செய்தால் இளம் கோழிக்குஞ்சு சூப் வைத்துக்கொடுப்பார்கள்...அவ்வளவே...

அய்யன் போன்ற சாமிகளுக்கு நேர்ந்துகொண்டு அவரவர் வீட்டிலேயே பொங்கல் வைத்து படையல் போடுவது உண்டு

சேவல் கட்டில் பலியாகும் சேவல் கறி... மற்றபடி , ஆட்டுக்கறி சமையல் என்பது குலதெய்வம் , அல்லது அவரவர்கள் ஊரிலுள்ள சிறு தெய்வ வழிபாட்டின் போது கோவில்களுக்கான நேர்ந்து கொண்டு வளர்க்கப்படும் கிடாய் வெட்டும்போதுதான்...

உற்றார் உறவினர் எல்லோரும் வந்து சாப்பிட்டுவிட்டுப்போனது போக மீதமிருக்கும் கறியை [ பெரும்பாலும் தொடைக்கறியை ] தனியாக எடுத்து உப்புக்கண்டம் போட்டு . கம்பிகளில் கோர்த்து வெயிலில் காயவைத்து எடுத்துவைத்துக்கொள்வார்கள்.. மழைக்காலங்களில் ஆற்று மீன் கடல் மீன் குளத்து மீன் கிடைக்காதபோது அதுதான் பிரதான உணவு...

கொங்குப்பகுதியைப் பொறுத்தவரை அசைவ உணவு சமைப்பதும் உண்பதும் சற்று ஆச்சாரக்குறைவான விஷயமும் கூட...கல்யாணம் , சீர் , வளைகாப்பு இப்படி எந்த விசேஷத்திலும் அசைவ உணவு கிடையாது...துக்க வீடுகளிலும் அப்படித்தான்...பதினாறாம் நாள் காரியம் உட்பட எதிலும் அசைவ உணவு கிடையாது...

அவ்வளவு ஏன் , அசைவ உணவு சமைக்க தனியான பாத்திரங்கள் வைத்திருப்பார்கள்... பெறால் சட்டி என்று அழைக்கப்படும் மேற்படி பாத்திரங்களை பிறநாட்களில் வீட்டுக்குள்ளேயே அனுமதிக்கமாட்டார்கள்... பொடக்காளி என்று அழைக்கப்படும் குளியல‌றையில் [ வீட்டை ஒட்டி ஒரு ஓரமாக தென்னை அல்லது பனை ஓலைகளால் சுற்றிலும் மறைக்கப்பட்ட [ ஒதுக்கு என்பார்கள்] ...அமைப்புதான் பொடக்காளி - புழக்கடை என்பதன் மரூஉ ] ஒரு ஓரமாக கவிழ்த்து வைத்திருப்பார்கள்.. அசைவ சமையலுக்கு பயன்படும் அகப்பை அந்த ஓலைப்படலில் சொருகப்பட்டிருக்கும்... அசைவம் சமைத்த அன்று இரவே சுத்தமாக கழுவி எடுத்துப்போய் பொடக்காளியில் வைத்துவிடுவார்கள்.. அடுத்த நாள் காலை எழுந்தவுடன் வீட்டை மாட்டுச்சாணம் போட்டு மெழுகிய [ வளிச்சு உடறது ] பிறகே அன்றைய வேலைகளை ஆரம்பிப்பார்கள்...

மிக சமீபகாலமாக மக்கள் உணவுப்பழக்கத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்ற‌ம் என்னை வியக்கவைக்கிறது... ஞாயிற்றுக்கிழமையானால் கறி சாப்பிட்டே ஆகவேண்டும் என்பது தவிர்க்கவே முடியாத விஷயமாகிவிட்டது... கறிக்கடைகளில் கூட்டம் நெறிபடுகிறது... திரும்பிய பக்கமெல்லாம் அசைவ ஹோட்ட‌ல்கள்...

பெரும்பாலான பெரிய ஊர்களில் எங்காவது ஒரே ஒரு பிரியாணிக்கடை தான் இருக்கும்....இன்று அதன் எண்ணிக்கை பலமடங்கு...

கிராம மக்கள் நகரங்களை நோக்கி நகரும் இந்தக்காலத்தில் ஆடுவளர்ப்பு கணிசமாக குறைந்துவிட்டது...

[ திருப்பூர் மாவட்டம் - கன்னிவாடி ] ஆட்டுச்சந்தை தமிழகத்தின் மிகப்பெரிய ஆட்டுச்சந்தைகளில் ஒன்று... இருபது வருடங்களுக்கு முன்பு வரை சந்தைக்கு வந்துகொண்டிருந்த ஆடுகளின் எண்ணிக்கையில் ஐந்தில் ஒருபங்கு கூட இப்போது வருவதில்லை... சென்னையைப் பொருத்த வரைக்கும் ஆந்திராவிலிருந்து தான் ஆடுகள் வந்து கொண்டிருக்கிறது அங்கு மட்டும் என்ன இதேநிலைதான் உற்பத்தி குறைவு.. கோழிகளைப்போல ஆடுகளை பண்ணைகளில் வளர்க்கும் முறையும் இன்னும் அதிகரிக்கவில்லை...

பின் நாள்தோறும் புற்றீசல் போல முளைக்கும் இத்தனை அசைவ ஹோட்டல்களுக்குத் தேவையான கறி எங்கிருந்து கிடைக்கும்? அத்தனையும் சுத்தமான , சுகாதாரமான ஆட்டுக்கறிதான் என்று உறுதி செய்ய யாரால் முடியும்?

அப்புறம் அவன் கிடைக்கும் எல்லாக் கறியையும் கலந்து விற்கத்தான் செய்வான்.. நோய்வாய்ப்பட்டு இறந்த ஆடுகள் , கோமாரி நோயால் செத்த மாடுகள் மற்ற நாலுகால் பிராணிகள் கறி என இப்படி எல்லா இறைச்சிகளும் கலந்து விற்கத்தான் செய்வார்கள்.....

கறியில் கலக்கப்படும்...எக்கச்சக்கமான மசாலாக்கள் , நிறமிகள், பிரிசர்வேட்டிவ்கள் கலக்கப்படுவதால் நம்மால் வித்தியாசம் கண்டுபிடிக்கவும் முடியாது...

தப்பிக்க ஒரே வழி... குறைந்தபட்சம் அசைவ உணவுகளைப் பொறுத்தவரைக்குமாவது நம் நம்பிக்கைக்கு பாத்திரமான கடைகள் அல்லது நம் மரபு சார்ந்த பழக்க வழக்கங்களுக்கு திரும்புவது மட்டும்தான்...

சிந்திப்பது... நம் கடமை.

Wednesday, May 19, 2021

பட்டா - வகைபாடு

பட்டா – ஒன்பது வகை உண்டு
ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும்.
ஒன்று பத்திரம்(SALE DEED ), 
இன்னொன்று பட்டா( PATTA ).
பத்திரம் – பதிவுத்துறை சார்ந்த ஆவணம், 
பட்டா – வருவாய்த்துறை சார்ந்த ஆவணம். 
இதில் பட்டாவை பற்றி இப்பகுதியில் காண்போம்!
பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிற தோ அவரே தற்போதைய உரிமையாளர். பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும். கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பு இருக்கும்.
அடுத்ததாக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய பட்டாக்களின் வகைகளை கீழே பார்க்கலாம்!!
1. யு.டி.ஆர் பட்டா (UDR – Updating Data Registry):
 மேனுவலாக கண்டபடி இருந்த நில உரிமை ஆவணங்களை முறைபடுத்தி ரீசர்வேக்கள் செய்து அனைத்து கிராமத்து நிலங்களுக்கும் சென்று (நத்தம் நிலங்கள் தவிர) நேரடி கள விசாரனை செய்து (வீட்டில் உள்ள ஆவணங்களை புத்தகங்கள் எல்லாம் தேவையுள்ளது தேவையற்றது என பிரித்து நம்முடையது பிறருடையைது என ஒமுங்குபடுத்தும் வேலையை போல்) மிக பெரிய அளவில் 1979 முதல் 1989 வரை தமிழகம் முழுவதுமாய் யு.டி.ஆர. பட்டா (Updating Data Registry ) தந்து அதனை கம்ப்யூட்டரில் ஏற்றினார்கள்.
அதாவது மேனுவல் ஆவணங்கள் கணினி மயமானது முதல் இப்பொழுது வரை இதனை தான் பட்டா ஆவணமாக பயன்படுத்தி வருகிறோம்,
· தற்பொழுது இவை எல்லாம் ஆன்லைனில் ஏற்றப்பட்டு விட்டது.
மேனுவல் பட்டா( Manuel Patta )
இப்பொழுது நடக்கும் சொத்து பரிவர்த்தனைகளுக்கான பட்டா பெயர் மாற்றங்கள் சர்வே எண் உட்பிரிவுகள் பெரும்பாலும் இந்த பட்டாவில் தான் நடக்கிறது. 
பட்டா வில் பெயரை சேர்த்தல், பட்டாவில் பெயரை மாற்றுதல், பட்டாவில் சர்வே எண் உட் பிரிவு செய்தல், போன்ற வேலைகளுக்கு இன்னும் பலர் அரசு, எந்திரத்துடன் போராடி வருகின்றனர். 
இன்னும் பலர், பட்டாவில் தந்தை பெயர் பிழை, தன் பெயர் பிழை, சர்வே எண் பிழை, அளவு பிழை என்று அதனை திருத்துவதற்கும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். 
இன்னும் நிறைய இளம் தலைமுறையினர் தன் பூட்டன் ,தாத்தா, பங்காளி ,அப்பா பெயரில் இருக்கும் பட்டாவை மாற்றாமல் நிலுவையில் வைத்து இருக்கிறார்கள். 
இவர்கள் பட்டாவை கிராம கணக்கரிடம் கொண்டு சென்றால் தான் பல நிதர்சனங்கள் புரியும்.
2. நத்தம் நிலவரி திட்டம்
          தோராய பட்டா & தூய பட்டா:
தோராய பட்டா மற்றும் தூய பட்டா இரண்டும் ஒத்த தன்மை கொண்டது தான்.
தோராய பட்டா முன்பக்கம்
யூ.டி.ஆர் பட்டாவில் நத்தம் நிலத்தை தவிர மீதி நிலங்களை பட்டியல் இட்டார்கள், அளந்தார்கள்! 
நத்தம் என்பது பொதுமக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக வெள்ளைகாரன் காலத்திலேயே வகைபடுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டது. 
பெரும்பாலும் நத்தம் நிலம் பழைய ஊர்களிலேயே அமைந்து இருக்கும். அந்த நத்தம் நிலத்திற்கு தான் தோராய மற்றும் தூய பட்டா வழங்கினர்.
தோராய பட்டா என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டா அதில் குடியிருந்தவர்களுக்கு வழங்கியது. 
நத்தம் நிலவரித்திட்ட தோராய பட்டாவில்( பிழைகள், தவறுகள் இருக்கலாம் ) அதில் ஏதாவது சிக்கல்கள்,பெயர் பிழைகள் அளவு பிழைகள் இருப்பதை மக்கள் தெரிவித்தால் அதனை திருத்துவதற்க்கு கால அவகாசம் கொடுத்து கொடுக்கும் பட்டா, “தோராய பட்டா” இது ஒரு தற்காலிகமான பட்டா! 
முழுமை விவரம் பெற்று தவறு எல்லாம் களைந்து மக்களுக்கு கொடுப்பது நத்தம நிலவரி திட்ட தூயப்பட்டா ஆகும். 
அதாவது கல்யாண பெண் மேக்கப்க்கு முன் மேக்கப்புக்கு பின் என்பதில் இருக்கும் வித்தியாசம்தான் தோராய பட்டாவுக்கும் தூய பட்டாவுக்கும் உள்ள வித்தியாசம். 
பெரும்பாலும் இரண்டு பட்டாவும் மேனுவலாகவே இருக்கும். 
பட்டா ஆவணத்தின் பின்புறம் நிலத்தின் வரைபடம் அளவுகளுடன் வரையபட்டு இருக்கும். 
ஒரு சிலர் தோராய பட்டா வாங்கியதும் பட்டா வாங்கிவிட்டோம் என்ற சந்தோஷத்தில் இருந்து விடுவார்கள். 
அதில் அளவுபிழைகள் இருக்கிறதா என நிலத்தை அளந்து ஒப்புமைபடுத்தி சரி பார்த்துகொள்ள வேண்டும். 
ஏனென்றால் நத்தம் நிலத்தில் இதுவரை இவ்வளவு இடம் நீ அனுபவிக்கிறாய் என ஆவணபடுத்தபடவில்லை, 
தோராய பட்டா வழங்கும் போது நீங்கள் அனுபவிக்கும் இடம் ஆவண படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
தூய பட்டா: 
நத்தம் நிலத்திறகு அரசு பட்டா வழங்குவது பொதுமக்களுக்கு என நினைக்க வேண்டாம். 
வரி விதிக்காமல் நீங்கள் அனுபவிக்கும் நிலத்தை வரிவிதிப்புக்குள் கொண்டு வரவும், சாலை, குளம்,பாதை இடங்களை ஆவணப்படுத்தி ஆக்கிரமிப்புகள் ஆகா வண்ணம் தடுக்கவும் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தபடும்போது பை புராடக்டாக தங்களுக்கு பட்டா வழங்கபடுகிறது. 
எனவே நிலவரிதிட்ட தோராய பட்டா வழங்கும் போது நிலத்தின் அளவுகளை கட்டாயம் சரி பார்க்கவும் 
இன்னும் பலர் தோராய பட்டா வாங்கியதுடன் நின்று விடுவர். 
தூயபட்டா அடுத்த ஆறுமாதத்துக்குள் கொடுத்து இருப்பர். 
அதனை அணுகி வாங்காமலேயே தோராய பட்டாவையே நிரந்தரபட்டா என்று நினைத்து கொண்டு இருப்பர்.
3. ஏ.டி கண்டிசன் பட்டா :
ஏ.டி.கண்டிசன் பட்டா என்பது வட்ட ஆதிதிராவிடர் நலன் தாசில்தார் அவர்கள் வீட்டு மனைகள் இல்லாத பழங்குடியினர் & ஆதிதிராவிடர் மக்களுக்கு கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மனைகளாக பிரித்து அம்மக்களுக்கு ஒப்படைப்பர். 
மேலும் மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் தனியார் இடம் உள்ள நிலத்தை கிரைய பேர பேச்சு மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை கிரயம் வாங்கி , பழங்குடி ஆதிதிராவிடர் மக்களுக்கு மனைகளாக பிரித்து ஒப்படைப்பார். 
அப்படி ஒப்படை செய்யும் போது, கொடுக்கும் பட்டா ஏ.டி.பட்டா ஆகும். அது பெரும் பாலும் மேனுவல் பட்டாவாகவே இருக்கும். 
பெண்கள் பெயருக்கு தான் வழங்குவது மரபாக இருக்கிறது. 
பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படம் ஒட்டி தனி வட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார். 
இதில் பல கண்டிசன்கள் இடம் பெற்று இருக்கும். 
முக்கியமாக மேற்படி இடத்தை பெறுபவர் வேறு யாருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு விற்க கூடாது. 
விற்றாலும் பழங்குடியினர் அல்லது ஆதிதிராவிடராக இருத்தல் வேண்டும் என்ற கண்டிசன்கள் முக்கியமானதாக இருக்கும்.
இதே தன்மையில் பயிர் செய்ய நிலமில்லாத ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு 5௦ சென்டில் இருந்து ஒரு ஏக்கர் வரை விவசாய நிலங்கள் ஒப்படைக்கப்படும்.
4. நில ஒப்படை பட்டா:
வீட்டு மனைகள் ! விவசாய நிலங்களை அரசு இலவசமாக ஒப்படைப்பது ஒப்படை பட்டா ஆகும்! 
முன்னாள் ராணுவ வீரர்கள் , பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள், நலிவுற் றவர்கள், அரவாணிகள், போன்றோர்களுக்கு அரசு நிலங்களை இலவசமாக கொடுக்கும். 
அதனை நில ஒப்படை பட்டா என்பர். 
இவற்றிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் பிறருக்கு விற்க கூடாது என்று கண்டிசன்கள் இருக்கும். 
இதனை டி.கார்டு கண்டிசன் பட்டா என்றும் சொல்லுவர்.
5. டி.எஸ்.எல்.ஆர் பட்டா:
டி.எஸ்.எல்.ஆர் பட்டா என்பது டவுன் சர்வே லேன்ட் ரெகார்ட் ஆவணம் . 
இது நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நகர் சர்வேயர்களை கொண்டு நிலங்க ளை மிக துல்லியமாக சர்வே செய்து உருவாக்கபடும் ஆவணகளில் இருந்து பொது மக்களுக்கு ஒரு EXTRACT எடுத்து கொடுப்பார்கள் . 
இந்த TSLR EXTRACT என்பது பட்டாவுக்கு இணையான ஆவணம் ஆகும் .
கிராம பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும் நகர பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும், இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், நகர பகுதிகளில் ஒவ்வொரு சதுர அடியும் மதிப்பு மிக்கது , 
அதனால் ERROR மிக மிக குறைந்தே இருக்கும். 
ஆனால் கிராம பகுதி சர்வேகளில் ஏக்கருக்கு 5 சென்ட் கூடுதல் குறைதல் இருக்கலாம். 
அதனால் அதிக துல்லியமும் , எச்சரிக்கை உணர்வுடனும் நகர பகுதி சர்வேக்கள் செய்யபடுகிறது.
6. தூசி பட்டா: 
கிராம கணக்கில் 2 ம் நம்பர் புக்கில் “C” பதிவேட்டில் கொடுக்கும் பட்டா 2C பட்டா ஆகும். 
ஆனால் பேச்சு வழக்கில் தூசி பட்டா என்று அழைக்கபடுகிறது. 
அரசு நிலத்தின்மேல் இருக்கும் (புளியமரங்கள், பனை மரங்கள், கனிதரும் மரங்க ள்) மரங்களை அனுபவிக்க பராமரித்து கொள்ள, மேற்படி மரங்களுக்கு உரிமையளித்து கொடுக்கப்படும் பட்டா 2C பட்டா இதனை மர பட்டா என்றும் அழைப்பர்.
7. கூட்டு பட்டா:
தனிப்பட்டாவுக்கு நேர் எதிர் கூடுப்பட்டா , கூட்டுபட்டாவில் நிலத்தின் அளவு, சர்வே எண் உட்பிரிவு, FMB – சப்டிவிசன் தனி தனியாக யார் யாருக்கு எவ்வளவு என்று குறிப்பிட்டு இருக்காது, 
உதாரணமாக ஒரு பெரிய கேக்கை (யார் யாருக்கு எத்தனை துண்டு, எந்த பக்கம் என்று சொல்லாமல் ) நான்கு மகன்களிடம் கொடுத்து நீங்களே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்வது போல் தான்.
நிலத்தில் நான்கு பேரோ, மூன்று பேரோ, இரண்டு பேரோ, அல்லது பல பேரோ ஒவ்வொரு மூலையில் நின்று அனுபவிப்பர். 
அவர்கள் பெயர்கள் எல்லாம் பட்டா வில் இருக்கும் 
ஆனால் சர்வே எண் உட்பிரிவு, அளவு பிரிவு, FMB உட்பிரிவு, செய்யப் பட்டு இருக்காது, 
பட்டாவே இல்லாமல் இருப்பதற்கு கூட்டு பட்டா சிறந்தது, கூட்டு பட்டவை விட தனிப்பட்டா சிறந்தது. 
8. தனி பட்டா:
தனிபட்டா என்பது தனி நபர் ஒருவர் பெயரில் இருக்கும் . 
மேற்படி நிலத்தின் சர்வே எண்ணில் தனியாக சப் டிவிசன் செய்யப்பட்டு இருக்கும். 
பேச்சு வழக்கில் பட்டா உடைந்து இந்த நபர் பெயருக்கு மாறி இருக்கும் என்று சொல்வோம். 
புல எண் வரைபடத்திலும் இவருடைய நிலத்துக்கு உட்பிரிவு வரைபடம் வரையப் பட்டு இருக்கும். 
தனிபட்டாவில் பெயர், நில அளவு, புல எண் உட்பிரிவு, FMB சப் டிவிசன், ஆகியவற்றில் 1௦௦% தெளிவாக இருக்கும். 
யு.டி.ஆர் பட்டா, நத்தம் நிலவரி திட்டம்-தோராய பட்டா & தூய பட்டா ஏ.டி. கண்டிசன் பட்டா , நில ஒப்படை பட்டா , டி.எஸ்.எல்.ஆர் பட்டா, தூசி பட்டா, ஆகிய 6 பட்டாவும் யாருக்கு எத்தன்மையில் வழங்கபடுகிறது என பிரிக்கப்பட்டு இருக்கிறது . 
தனிபட்டா கூட்டுபட்டா என்பது பட்டா ஆவணத்தின் தன்மையை பொறுத்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.

Monday, November 16, 2020

The Greatest Emperor of India - Rajendra chozan.

நம் புத்தகங்கள்  மறைத்த  உண்மைச் செய்திகளை நம் பிள்ளைகளுக்கு சொல்லி வளர்ப்போம்...

மாவீரன் என்றாலே அலெக்சாண்டர் என்றும் நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்...

The Greatest Emperor of India - Rajendra chozan.

இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் மாமன்னர் ராஜேந்திர சோழர் மட்டுமே..

தனது ஆயுட்காலத்தில் 65 ஆண்டுகளை போர்க்களத்தில் செலவிட்டவர்.. 35 நாடுகளை போரில் வெற்றி கண்டவர்.. 

அவரது போர்ப்படையில் 60,000 யானைகளும், 5 லட்சம் குதிரைகளும் இருந்ததாக செப்பேடுகள் கூறுகின்றன..

இன்றைய காலகட்டத்தில் ஒரு பசுமாட்டிற்கு தினந்தோறும்  ஆகும் தீவன செலவு  200 ரூபாய்.. பத்து மாட்டிற்கு ஆகும் செலவு 2000 ரூபாய்.. ஒரு மாதத்திற்கான செலவு சராசரியாக 60,000 ரூபாய்.. ஒரு மாட்டை வளர்த்தால் அதன் மூலம் பெறப்படும் பால், தயிர் ,வெண்ணை, நெய் போன்றவற்றால் லாபம் ஈட்ட முடியும்...

ஆனால் எந்த லாபத்தையும் வழங்காத 60,000 யானைகளையும் 5 லட்சம் குதிரைகளையும் , ராஜேந்திர சோழன் பராமரிப்பது எதற்காக ??? 

போர் புரிவதற்காக மட்டும்தான் !!!

யானைப்படை  மற்றும் குதிரைப்படையே இலட்சக்கணக்கில் வைத்திருந்தவனின் , காலாட் படை எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? 

தனது பதினேழாம் வயதில், இளவரசனாக இருந்து  ராஜேந்திர சோழன் வென்ற போரில் அவனுடன் இருந்த வீரர்களின் எண்ணிக்கை 90,000...
1016 ஆண்டுக்கு பிறகு சோழர் படை முழுவதும் அவன் கட்டுப்பாட்டில்தான் இருந்தது.. சுமார் 20 லட்சம் வீரர்கள் அவன் படையில் இருந்தனர்...
தன் சேனை முழுவதற்கும் நாளொன்றுக்கு ஆகும் சாப்பாட்டு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்?? பராமரிப்பு செலவு எவ்வளவு இருந்திருக்க வேண்டும்??  நிச்சயம் கோடிக்கணக்கில் இருந்திருக்கும்..

அத்துணை பேருக்கும் உணவு வழங்குவதற்கு, அவன் நாட்டை எவ்வளவு செழிப்பாக  வைத்திருந்துருப்பான் என்பதை கற்பனை செய்யுங்கள்.. மாதக்கணக்கில் வீரர்கள் வெளியூர் பயணம் மேற்கொள்ளும் போதும் அதற்கான உணவை கையில் எடுத்துச் சென்றிருப்பார்கள் அல்லவா?. தஞ்சை டெல்டா மாவட்டங்கள் விவசாயத்தில் உயர்ந்து நின்றதற்கு இராஜேந்திர சோழனே முதன் முதற் காரணம்...

எதிரிகள் தன் நாட்டைத் தாக்கி அழிக்க நேரிட்டால், தஞ்சையின் நெற்களஞ்சியங்கள் எல்லாம் அழிந்துவிடும்  என்ற ஒரே காரணத்திற்காக தனது தந்தை ராஜராஜ சோழன் ஆட்சி செய்த தஞ்சை மண்ணிலிருந்து ஜெயங்கொண்ட சோழபுரத்திற்கு தனது தலைமை இடத்தை மாற்றினான் ராஜேந்திரசோழன்...

உழவர்களின் மேல் அவ்வளவு வாஞ்சை !!!

ராஜேந்திர சோழன் தன் படைகள் ஓய்வு எடுப்பதற்காக காடுகளை வெட்டி சீர் படுத்தினான் என்பதற்கு  இன்றைய அரியலூர் மாவட்டத்தில் உள்ள " படைநிலை காடுவெட்டி" என்ற  ஊரே சாட்சியம்...

ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு நாட்டை , பத்தாயிரம் போர் கப்பலுடன் வெற்றி பெற்றான் என்பது நம் கற்பனைக்கு எட்டாதவை...இந்தியாவை பிடிப்பதற்கு கூட பிரிட்டிஷ், பிரஞ்ச் அரசுகள்  அவ்வளவு கப்பலில் வந்ததாகத் தெரியவில்லை...
 ஒரு நாட்டைப் பிடிக்க 6 மாதங்கள் முதல் 2 வருடங்கள் ஆகும் என்பதும், அத்தனை நாட்கள் தனது யானைகள் ,குதிரைகள் , காலாட் படை வீரர்களுக்கான உணவை தன்னுடன் எடுத்துச் சென்றான் என்றால் அவனின் உணவு தானிய உற்பத்தி எவ்வளவு இருந்திருக்க வேண்டும் ???

உப்பு நீர் சூழ்ந்த கடல்களின் இடையே, லட்சக்கணக்கான வீரர்களுக்கும் குதிரைகளுக்கும் மாதக்கணக்கில்  தூய்மையான குடிநீரை எவ்வாறு அவன் வழங்கியிருக்க முடியும்?? அசுத்தமான குடிநீரால் அந்த காலத்திலும் காலரா பரவியது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.. அப்படியானால்,  கடல் நீரை சுத்தப்படுத்தும் அறிவியலை அறிந்தவனா அவன்??

போரில் அடிபட்ட வீரர்களின் காயங்களை ஆற்றுவதற்கு எத்தனை ஆயிரம் மருத்துவர்கள் அவனுடன் சென்று இருக்க வேண்டும்?? மருத்துவத்தில் பிரதிநிதித்துவம் பெற்ற குழுவை அவன் பெற்றிருக்கவில்லை என்றால்  60 ஆண்டுகளாக தொடர்  வெற்றி பெற்றிருக்க முடியுமா???

   தற்போதைய இந்தோனேஷியா, மலேசியா, சீனா, கம்போடியா, இலங்கை போன்ற நாடுகளை கப்பல் படையால் வென்றெடுத்த மாவீரன் அவன்... அதுவும் குறிப்பாக ஸ்ரீவிஜய நாடு பெரும் வணிக நாடாக விளங்கியது.. உலகிலுள்ள பல  வணிகர்களும் அங்கு வந்து போவது வழக்கம்.. நாட்டின் பொருளாதாரமான வணிகத்தை காப்பாற்ற எப்பேர்ப்பட்ட போர்வீரர்கள் அவசியம்?? 
அப்படிப்பட்ட சிறந்த போர்வீரர்களை  துவம்சம் செய்து பல நாட்டு வணிகத்தை கைப்பற்றியவன்  ராஜேந்திரசோழன்..

தமிழக வாணிப செட்டியார்கள், அவன் காலத்தில்தான் உலகம் முழுவதும் பயணம் செய்து பெரும்பணம் ஈட்டினர்...

நமது அறிவுசார் காப்பியங்களான, தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சிவபுராணம், திருக்குறள், மன்னரின் நூல்கள் உள்ளிட்ட பலவற்றையும் பாடசாலைகள் அமைத்து அதன் மூலம் பாதுகாத்தவன் அவன்..

உங்களுக்கு கோயில்கள் எதற்கு?  அதற்கு பதில் பள்ளிக் கூடங்களையும் மருத்துவமனைகளையும் கட்டுங்கள் என்று எந்த தற்குறியும் கேள்வி கேட்க வாய்ப்பு வழங்காதவன் அவன்...

முக்கியமாக,
பல்வேறு பொழுதுபோக்குகள் இருக்கும் இந்த நவயுக காலத்திலேயே நமக்குள் தேவை இல்லாத ஜாதி சண்டைகள் வருகிறது. ஆனால்  அந்த காலத்தில் பல ஜாதி பிரிவை உள்ளடக்கிய லட்சக்கணக்கான  போர் வீரர்கள் இடையே எந்தவித ஜாதி சண்டையும் வந்ததாக எந்த ஒரு வரலாற்று ஏடுகளும் கூறவில்லை...

ஆம்,
சமூக நீதியின் படி செம்மையான ஆட்சிபுரிந்த  சக்கரவர்த்தி அவன்... 

தமிழர்களின் ஒப்பற்ற தலைவன் அவன் ஒருவனே! 

மாமன்னன் ராஜேந்திர சோழன் -The Greatest

Tuesday, October 13, 2020

மதுரை மீனாட்சி அம்மன் தனிசிறப்புகள்

 1.மீனாட்சி அம்மன் விஹ்ரகம் மரகத கல்லால் ஆனது. ஏனென்றால் பொதுவாக அன்னையின் திருமேனி பச்சை நிறம்.

 2.அன்னையின் வலது கால் சற்று முன் நோக்கி இருக்கும், ஏனென்றால் பக்தர்கள் அழைத்தால் உடனே ஓடி வருவதற்காக. 

3.அன்னை கையில் ஏந்திய கிளி அன்னையின் காதில் பேசுவது போல் இருக்கும் ஏனென்றால்  கிளி பேசுவதை திருப்பி பேசும் அதைப்போல்  பக்தர்களின் வேண்டுதலை திரும்ப திரும்ப அன்னையிடம் சொல்லும் இதனால் நமது வேண்டுதல் விரைவாக நிறைவேறும். 

4.அன்னையின் விக்ரஹம் சுயம்பு ஆகும் சில ஆலயத்தில் லிங்கம் சுயம்புவாக இருக்கும் ஆனால் மதுரையில் மீனாட்சி உக்ரபாண்டியனுக்கு முடிசூட்டிய பின்  சொக்கநாதர் பெருமான் அருகில் விக்ரஹமாக நின்றுவிட்டாள் அதனால் சுயம்பு அன்னை. அன்னை மதுரையில் யாகசாலையில் அக்னியில் அவதரித்தாள்.
இவளின் இயர்பெயர் தடாதகை அங்கயற்கண்ணிஆகும்.  

5. பாண்டிய மஹாராஜாவுக்கும் மஹாராணி காஞ்சனமாலைக்கும் ஒரே மகள். அதனால் பாண்டிய நாட்டின் பேரரசி ஆவாள்.

6. இங்கு கற்பகிரகத்தில் அன்னையின் விக்ரஹம் உயிர்உடன் இருக்கும் ஒரு பெண்ணை பார்ப்பது போல் இருக்கும்.

7.அன்னையே சிலையாக இருப்பதால் மிகவும் அழகாக இருக்கும் இவளை பார்த்து கொண்டே இருக்க வேண்டும்போல் இருக்கும்.

8. அன்னையின் சிலை மிகவும் நளினமாக இருக்கும் அன்னையின் சன்னதியில் தாழம்பூ குங்குமம் பிரசாதமாக தரப்படும். 

8.மதுரையில் அன்னைக்கே முதல் மரியாதை. இங்கு அம்பிகையை முதலில் வணக்க வேண்டும் பின்னர்தான் சுவாமியை தரிசிக்க வேண்டும்.

9.மீனாட்சி சுந்தரேஸ்வரர் மதுரையை அன்றும் இன்றும் என்றும் ஆட்சி செய்வார்கள் என்பது சிவவாக்கு.இங்கு எம்பெருமான் 64 திருவிளையாடல் புரிந்து உள்ளார். வேறு எந்த ஆலயத்திலும் இத்தனை திருவிளையாடல் புரிந்தது இல்லை. 

10.அனைத்து சிவ ஆலயமும் முக்தியை தரும் ஆனால் சிவ ஆலயத்தில் சகல செல்வமும் தரும் கோவில்.

11. மீனாட்சி சுந்தரேஸ்வரர் வாழ்ந்ததால் மதுரைக்கு வந்தாலே முக்தி

12. இந்த கோவில் அம்மன் பெயரில் அழைக்கப்படுகிறது. உலகின் பெரிய அம்மன் கோவில். சக்தி பீடமும் ஆகும். 

13.வாழ்நாளில் ஒருமுறையாவது தரிசிக்க வேண்டிய ஆலயம்.சித்திரை திருவிழா அன்னைக்கும் ஆவணிமூல பெருவிழா சுவாமிக்கும் நடக்கும். மிகவும் அழகான கோபுரங்கள் கொண்ட  கோவில்

14. தமிழகத்தில் மிகப்பெரிய விழா நடக்கும் முதல் ஆலயம்.சைவமும் வைணவ சமயமும் ஒன்றாக கொண்டாடும் விழா.

15. இவளின் அண்ணன் மாயவன் அழகர்மலை அழகுமலையான்.உலக அதிசியங்களுள் ஒன்று அன்னையின் ஆலயம். இவளை சரண் அடைந்தால் நம்மை காப்பாள் அன்னை மீனாட்சி அம்மா போற்றி போற்றி போற்றி....

Sunday, October 11, 2020

IAS தேர்வு என்றால் என்ன ?

IAS மற்றும் IPS உள்ளிட்ட 
24 பணிகளுக்காக 
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணயத்தினால்(UPSC) ஆண்டிற்கு ஒருமுறை நடத்தப்படும் குடிமைப்பணித் தேர்வே(CIVIL SERVICE EXAM) மிகவும் பிரபலமாக IAS தேர்வு என்று அழைக்கப்படுகிறது.

*F.A.Q*
*IAS தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி என்ன ?*
ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பட்டப்படிப்பு தகுதி பெற்றிருக்க வேண்டும்.

*IAS தேர்விற்கான வயது வரம்பு என்ன ?*
குறைந்தபட்ச வயது : 
21 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்
அதிகபட்ச வயது : பொதுப்பிரிவினர் 
(GENERAL) : 32
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) :35
ஆதிதிராவிடர்c/பழங்குடியினர்(SC/ST) : 37.

*ஒருவர் IAS தேர்வை எத்தனை முறை எழுத முடியும் ?*
பொதுப்பிரிவினர் (GENERAL) : 6 முறை
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்(OBC) : 9 முறை
ஆதிதிராவிடர்/பழங்குடியினர்(SC/ST) : எண்ணிக்கை இல்லை(Unlimited)

*ஏன் IAS தேர்வு எழுத வேண்டும் ?*
சமூகம் மற்றும் நாட்டிற்கு நேரடியாக சேவை செய்யும் வாய்ப்பு
ஆளுமை அதிகாரம்
பெருமதிப்பிற்குரிய பணி
சமூகத்தில் மிகவும் அதிகமான மரியாதை
மேலும் பல…..

*IAS தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலத்தில் நல்ல புலமை பெற்றிருக்க வேண்டுமா ?*
இல்லை. அடிப்படை ஆங்கில அறிவு மட்டுமே போதுமானது.

*IAS தேர்வை தமிழில் எழுதமுடியுமா ?*
முடியும்.IAS முதன்மைத் தேர்வை தமிழில் எழுதலாம்.

*IAS தேர்வு எழுத வேண்டுமென்றால் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் வீதம் 365 நாட்கள் படிக்க வேண்டுமா ?*
இல்லை.
ஒரு நாளைக்கு 4 முதல் 8 மணிநேரம் படித்தால் மட்டுமே போதுமானது.

IAS தேர்வை ஒரு வருடத்திற்கு இலட்சக்கணக்கானோர் எழுதுகின்றனர்.
ஆனால் சிலரே தேர்வில் வெற்றியடைகின்றனர்.
*என்னால் முடியுமா ?*
கண்டிப்பாக முடியும்.
இலட்சக்கணக்கானோர் விண்ணப்பிக்கவும்,தேர்வு எழுதவும் செய்கின்றனர்.
ஆனால் உண்மையான போட்டியாளர்கள் ஆயிர கணக்கில் மட்டுமே.

உண்மையான போட்டியாளர்கள் 
என்பவர்கள் சரியான திட்டமிடுதலுடன்,
தொடர்ச்சியாக பயிற்சி செய்பவர்களே..❗
*IAS தேர்வு என்பது மிகப்பெரும் கடல் போன்றது என்பது உண்மைதானா ?*
*தேர்விற்கு அதிக புத்தகங்கள் படிக்க வேண்டுமா ?*
இல்லை.
IAS தேர்வில் இடம்பெறும் வினாக்கள் அனைத்தும் தேர்வாணையத்தால் கொடுக்கப்பட்ட பாடத்திட்டத்தின் படியே இருக்கும்.
அந்தப்பாடத்திட்டத்தின்படி தேர்வுக்கு தயார் செய்தாலே எளிதில் வெற்றி பெறலாம்.

*IAS தேர்விற்கு எப்போதிலிருந்து தயாராக வேண்டும் ?*
IAS தேர்வு என்பது பொதுத் தேர்வல்ல.
அது ஓர் போட்டித் தேர்வு.
ஆகவே இன்றிலிருந்தே தயாராவது அவசியம்.

*IAS தேர்வில் நகர்புற மாணவர்களே எளிதில் வெற்றி பெற முடியும். கிராமப்புற மாணவர்கள் வெற்றி பெறுவது கடினம் என்ற கருத்து உண்மைதானா ?*
முற்றிலும் தவறான கருத்து.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமானது எந்தப் பாகுபாடுமின்றி அனைத்துப் பகுதி மாணவர்களும் பங்குபெறும் வகையில் தான் வினாத்தாளை அமைக்கிறது.

*IAS தேர்விற்கு படிக்க வேண்டுமென்றால் டெல்லி மற்றும் முக்கிய நகரங்களுக்குச் சென்று பயிற்சி பெற வேண்டுமா ?*
இல்லை.
அப்படி எதுவும் இல்லை.. 
நீங்கள் வீட்டிலிருந்தே படித்து வெற்றி பெறலாம்.
அவ்வாறு வெற்றிபெற கீழ்வருபவை அனைத்தும் அவசியம்
தேர்வுமுறை பற்றி அறிந்து கொள்ளுதல்
வினா அமைப்பு முறை பற்றி அறிந்து கொள்ளுதல்
சரியான திட்டமிடல்
திட்டமிட்டதை தொடர்ச்சியாக செயல்படுத்துதல்
மாதிரித் தேர்வுகள் எழுதுதல்
சரியான வழிகாட்டல்
இறுதியாக முழு நம்பிக்கையோடுj இருத்தல்
இவை அனைத்தும் இருந்தால் நீங்களும் 
ஒரு IAS, IPS அதிகாரி ஆவது நிச்சயம்..I
தேர்வில் வெற்றிபெற வாழ்த்துக்கள்

உலகிலேயே அழகான நடராஜர் வீற்றிருக்கும் கோனேரிராஜபுரம்

🛞புண்ணியம் செய்தவர் மட்டுமே உலகிலேயே அழகு ததும்பி வழியும் இந்த நடராஜரை தரிசித்து மகிழும் பாக்கியம் பெற முடியும்…! உலகிலேயே அழகா...