கை, கால் வீக்கமா? சிறுநீரகம் கழிவை வடிகட்ட முடியாத நிலையை அடையும் போது ஏற்படும் அறிகுறிகள் தெரியுமா?
சிறுநீரக செயலிழப்பு எதனால் ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா? இரத்தத்தில் இருந்து வரும் கழிவை வடிகட்ட முடியாத நிலையை அடையும் போது சிறுநீரகம் செயலிழக்கிறது. சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை குலைக்கும் பல காரணிகள் உண்டு . அவை நாள்பட்ட நோய்கள், சுற்றுப்புற சூழல் மாசு, நீர்ச்சத்து குறைபாடு போன்றவை. நாள்பட்ட சிறுநீரக நோய்களின் அறிகுறிகள் பொதுவானதாக இருப்பதால், இவை பெரும்பாலும் கவனிக்காமல் விடப்படுகின்றன. இப்போது நாம் இதன் அறிகுறிகளைப் பற்றி காண்போம்.
சோர்வாக உணர்வது :
ஆரோக்கியமான சிறுநீரகம் எரித்ரோஃபோய்டின் என்ற ஹார்மோன்களை சுரக்கிறது. இந்த ஹார்மோன் ரத்த அணுக்களை உற்பத்தி செய்ய உடலுக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறது. சிறுநீரக செயலிழப்பு உண்டாகும்போது, இந்த ஹார்மோன் குறைவாக சுரக்கிறது. இதனால் போதிய சிவப்பு அணுக்கள் உற்பத்தியாகாமல் உடல் விரைவில் சோர்வடைகிறது.
சிறுநீரில் நுரை :
சிறுநீரகத்தில் ஏதாவது நோய் இருந்தால் சிறுநீரில் நுரை அதிகமாக தோன்றும். சிறுநீரக செயலிழப்பு உண்டாகும்போது சிறுநீர் நிறம் மாறி, நுரையாகத் தோன்றும். சிறுநீரில் அளவுக்கு அதிகமான புரதம் இருந்தாலும் இப்படி நுரை அதிகமான சிறுநீர் வெளியேறும்.
சுவாசப் பிரச்சினைகள்
சிறுநீரகம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளில் இரண்டு விதத்தில் சம்பந்தப்படுகிறது. உடலில் அதிக அளவு திரவம் வெளியேற்றப்படாமல் இருப்பதால் அவை நுரையீரலில் சென்று சேர்கிறது. மற்றொன்று , ரத்தசோகை ஏற்படுவதால் உடல் பிராண வாயுவிற்காக தவித்து மூச்சு விடுவதில் சிரமம் உண்டாகிறது.
தலைசுற்றல் மற்றும் சோர்வு :
சிறுநீரக செயலிழப்பு தொடர்பான அனீமியா என்பது மூளைக்கு ஆக்ஸிஜன் போதுமானதாக இல்லை என்று பொருள். இதனால் மயக்கம், தலைசுற்றல், உடல் சோர்வு போன்றவை உண்டாகலாம். இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருக்குமானால் உடனடியாக மருத்துவரை அணுகுவதும் சிறுநீரக சோதனை செய்து கொள்வதும் நல்லது.
கை மற்றும் கால் பாதங்களில் வீக்கம் :
உங்கள் கைகளில் அல்லது கால் பாதங்களில் வீக்கம் ஏற்பட்டால், சிறுநீரக செயலிழப்பும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். செயலிழந்த சிறுநீரகத்தால் உடலில் உள்ள திரவத்தை வெளியேற்ற முடியாமல், அவை உடலில் தங்கி கை, கால் , பாதங்களில் வீக்கம் உண்டாகலாம்.
அரிப்பு :
இரத்தத்தில் இருந்து கழிவுகளை நீக்கும் வேலையை சிறுநீரகம் செய்கிறது. சிறுநீரகத்தில் பிரச்சனை உண்டாகும்போது, இரத்தத்தில் இருந்து கழிவுகள் வெளியேறாமல் இருப்பதால் உடலில் ஒருவித அரிப்பு உண்டாகலாம். சில நாட்கள் தொடர்ந்து இந்த அரிப்பு பிரச்சனைகள் தீராமல் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
முகத்தில் வீக்கம் :
முகத்தில் உண்டாகும் வீக்கம் கூட சிறுநீரக நோயின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரகம் செயலிழந்தால் உடலில் உள்ள கழிவு கலந்த திரவம் வெளியேற முடியாமல் உடலில் தங்குகிறது . இத்தகைய, அளவுக்கு அதிகமான திரவ சேர்க்கையால் முகத்தில் வீக்கம் ஏற்படலாம். இது மிகவும் அசௌகரியமான நிலையை உண்டாக்கும். அதனால் உடனடியாக மருத்துவரை கலந்து ஆலோசிக்கவும்.
அடிக்கடி சிறுநீர் கழித்தல்
இரவு நேரத்தில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? ஆம் என்றால் உங்களுக்கு சிறுநீரக நோய்க்கான அறிகுறியாக இது இருக்கலாம். சிறுநீரக செயலிழப்பு உண்டாகும் போது, அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது அல்லது சிறுநீர் வெளியேறும்போது ஒரு வித சிரமம் ஏற்படுவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.
குமட்டல் :
குமட்டலும் சிறுநீரக பிரச்சனையின் அறிகுறியாகும். சிறுநீரக செயலிழப்பால், உடலில் இருந்து நச்சுகள் வெளியேறாமல் இருக்கும். இதனால் இந்த நச்சுகள் உடலில் தங்கி சிறுநீரக பாதிப்பை உண்டாக்கி, செயலிழப்பை அதிகப்படுத்தும்.
வலிப்பு நோய் :
வலிப்பு நோயம் சிறுநீரக நோயின் அறிகுறியாகும். மூளையின் மின் செயல்பாடுகளில் உண்டாகும் மாற்றமே வலிப்பு நோய்க்குக் காரணம் ஆகும். இந்த மாற்றத்தால் உடல் மற்றும் தலையில் கட்டுப்படுத்த முடியாத வகையில் அசைவுகள் தோன்றும். இதனால் உடல் தன் கட்டுப்பாட்டை இழக்கும். இந்த அறிகுறியை நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவும்.
குறிப்பு:- தகவல்கள் அறிவு நோக்கத்திற்காகவே பகிரப்படுகிறது. ஒரு வைத்தியரின் ஆலோசனை இல்லாமல், ஒரு உடல்நலப் பிரச்சினைக்கோ அல்லது நோயை கண்டறியவோ அல்லது சிகிச்சை செய்யவோ இந்த தகவல்களை நீங்கள் பயன்படுத்தக்கூடாது .......